திங்கள், 30 ஏப்ரல், 2012


சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும்.

கவி காளமேகத்தின் சிலேடை பாடல்:

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.

விளக்கம்:

வாரிக் கள‌த்தடிக்கும் – கதிர் அறுவடை செய்து பின்னர் களத்துமேட்டிற்கு வந்து நெற்களை பிரிப்பதற்கு அடிக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை தன் துதிக்கைகளாலே தூக்கி போர் களத்தில் அடித்து கொள்ளும் (யானை)

வந்தபின் கோட்டைபுகும் – வைக்கோலில் இருந்து நெல்லை பிரித்த பிறகு, அதனை சேகரித்து கோட்டைக்குள்ளே வைக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை கொன்று விட்டு வெற்றி வாகையோடு எதிரியின் கோட்டைக்குள் புகும் (யானை)

போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக அடுக்கி வைத்து சிறப்புற்று அழகாய் விளங்கும் (வைக்கோல்) / யானையின் அங்கம் போரில் முக்கியம் என்பதால், போரில் சிறந்து விளங்கி சிறப்பாக திகழும் (யானை)

இவ்வாறு சிறப்புற்ற சிவந்த தேகம் கொண்ட திருமலைராயன் மலைச்சாரலில் வைக்கோலும் யானையும் நிறைய இருக்கிறது என்று திருமலைராயன் மலையின் தானிய மற்றும் போர் வளத்தை சிலேடையாக பாடினார் கவி காளமேகம்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012


குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

சனி, 28 ஏப்ரல், 2012


பழமொழி: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் - ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக்கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்து வகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் நடக்கும். இதைத்தான் "தீதும் நன்றும் பிறர்தர வாரா"  என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக்கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

மேற்காணும் விளக்கத்தை தவிர, வேறு ஒரு விளக்கமும் கூறப்படுகின்றது... இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர்.

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்று கூறினர் பெரியோர். எனவே இப்பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு "எருது" என்பது அனைவருக்கும் தெரியும். உழவு மாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

"மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."

மிக அழகான இப்பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி"

என்ற பழமொழியே எழுந்தது எனலாம். கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

ஆனைக்கு (யானைக்கு) ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவேதான், உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்...

வெள்ளி, 27 ஏப்ரல், 2012



சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்...

சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எங்களை கொண்டு முடிந்தால் மட்டுமே ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுத்தால் முழு எண்ணாக விடை வரும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி, ஒன்று, சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எண்களில்தான் முடிய வேண்டும் அல்லது வரும் விடையினை முழு எண்ணாக மாற்ற வேண்டும்... இவை இரண்டில் ஒன்று சரியாக இருக்க வேண்டும்.


திங்கள், 23 ஏப்ரல், 2012


பழமொழி: குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

மோதிரம் போட்டிருப்பவரின் கைகளால் குட்டுப்படலாம் தப்பில்லை என்பதுதான் இதற்கான பொருள் என்று சிலர் இதற்க்கு அர்த்தம் கூறுகின்றனர்.

நம் தலையில் குட்டுபவர் மோதிரம் போட்டிருந்தால் என்ன காப்பு போட்டிருந்தால் என்ன? மோதிரம் போட்டிருப்பவர் கையை பின்புறமாக திருப்பிக் குட்டினால் மோதிரம் தலையில் பட்டு சில நேரங்களில் காயம் கூட ஏற்படலாம். அப்படி இருக்கையில் மோதிரம் அணிந்தவரின் கையால் குட்டுப்படுவதில் என்ன பெருமை இருக்கிறது?
மேலும் நாம் தவறு ஏதும் செய்யாத போது அவரிடம் ஏன் குட்டு வாங்கணும்? இப்படி எல்லாம் நினைக்கத்தோன்றுகிறதுதானே.

ஆனால் இதற்கு உண்மையான பொருள் - உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவரின் கையால் பாராட்டுப்பெறுவது என்பதுதான் இதன் உண்மையானப் பொருள். அப்படி பாராட்டு வாங்கும் போது நமக்கு எளிதில் அங்கீகாரம் கிடைப்பதோடு நமக்கும் பாராட்டும் புகழும் விரைவில் வந்து சேரும்.

உதாராணமாக, பாடலாசிரியராக வரவேண்டும் என்று விரும்பும் ஒரு கவிஞருக்கு இசையில் சிறந்த புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் அங்கீகாரம் கொடுத்து அவர் திறமையை பிறர் அறிய வெளிச்சம் போட்டு காட்டுவதை உதாரணமாகக் சொல்லலாம்.

தோன்றின் புகழோடு தோன்றுதல் என்கிறார் வள்ளுவர்.
மோதிரக்கையால் குட்டுப்பட யாருக்குதான் ஆசை இருக்காது?

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012


பாடல்:
சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிரியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்

மேற்கூறிய பாடலை எழுதியவர் ஔவையார் அவர்கள்...

பொருள்:
பிறர் கேட்காமலேயே உதவுபவர்கள் உயர்ந்தவர்கள், வண்மையானவர்கள்... பிறர் கேட்ட பிறகு உதவுபவர்கள் சிறியவர், சாதாரணமானவர்கள்... பிறர் கேட்ட பின்பும் உதவாமல் இருப்பவர் கயவர்கள், பெருந்த்தன்மையற்றவர்கள்...

இவர்கள் பலா, மா மற்றும் பாதிரி மரங்களை போன்றவர்கள்... பலாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவிக்காமல் காய் காய்க்கும்... மாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவித்து காய் காய்க்கும்... பாதிரி மரம் "பூ" பூக்கும் ஆனால் காய் கைக்காது...

வியாழன், 19 ஏப்ரல், 2012

நாராய்! நாராய்... செங்கால் நாராய்...


காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.

உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.


அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல். அந்தப் பாடல் –

"நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி..." -என்று போகிறது.

இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளிவாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.

(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்).


செவ்வாய், 10 ஏப்ரல், 2012


"க" கர வரிசை மட்டுமே கொண்ட பாடல் இது...

பாடல்:
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

பொருள்:
காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ (அரசன்) பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்.

காளமேகப் புலவர் எழுதிய பாடல் இது...

சனி, 7 ஏப்ரல், 2012


பாடல்:
நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே...

பொருள்:
நாக்கு பிளந்துபோகுமலவிர்க்கு பொய்களை பேசி செல்வந்தனை சேர்த்து, இது நல்லது இது கேட்டது என்று தெரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மண்ணிலிருந்து வெளிவருகின்ற புற்றீசல்களை போல பல குழந்தைகளை பெருகின்றீர்...

அவர்களை நன்றாக வளர்க்கவும் முடியாமல், கைவிட்டுவிட்டு செல்லவும் முடியாமல், பாதி அறுத்த மரத்தில் கால்தனை நுழைத்த பிறகு, அதில் வைத்திருந்த ஆப்பதனை அசைத்ததினால் மரத்திர்க்கிடையில் மாட்டிக்கொண்டு வெளியேரமுடியாமல் தவிக்கும் குரங்கின போல தவிக்கின்றீரே...

இப்பாடல் பட்டினத்தார் அவர்களால் எழுதப்பட்டது...

வெள்ளி, 6 ஏப்ரல், 2012


பாடல் 1:
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றி த் தொடரு மிருவினைப் புண்ணியம் பாவமுமே...

மேற்கூறிய பாடலை படித்தவுடன் எத்துனை பேருக்கு அதன் அர்த்தம் புரியம் என்று சொல்லயியலாது... அதன் அர்த்தம் புரியாதவர்கள் பின்வரும் பாடலை படித்தால் அதன் அர்த்தம் கண்டிப்பாக புரிந்துவிடும்...

பாடல் 2:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

மேற்கூறிய இரண்டு பாடல்களும் ஒரே பொருளை உணர்த்துகின்றன...
முதல் பாடல் பட்டினத்தார் அவர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

இரண்டாவது பாடல் கவியரசு கண்ணதாசன் அவர்களால் அரை  நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

ஒரே கருத்தினை காலத்திர்க்கேற்ப மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக இரண்டு கவிஞர்களும் எழுதியுள்ளது அவ்விரு பாடல்களின் தனிச்சிறப்பு...

புதன், 4 ஏப்ரல், 2012

தேன் ஈக்களால், மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள். மாடுகளால், மக்கள் பால் சாப்பிடுகிறார்கள். ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள். நாய்களால் காக்கப்படுகிறார்கள். கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோ ஜீவன்களால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை.

அப்படித்தான், மனித ஜீவனும், பல வழிகளில் பல காரணங்களால், வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.

- தந்தை பெரியார்

பழமொழி: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் பறந்துபோகும் பத்து என பின்வருவனவற்றை ஔவையார் கூறுகிறார்.

மானம்
குலம்
கல்வி
வன்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி (பதவி)
தளன்மை (இளகிய மனம்)
காமுறுதல்

திங்கள், 2 ஏப்ரல், 2012


பழமொழி: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...!!!

பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்த பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தும் ஒரு பழமொழி...

பதினாறு குழந்தைகள் பெற்று நன்றாக வாழவேண்டும் என்று விளையாட்டாக சிலர் பொருள் கொல்வதுமுண்டு...

வாழ்க்கையில் பெற வேண்டிய பதினாறு என்ன என்பதை ஒரு பாடலில் கூறியுள்ளனர்...

துதிவாணி வீறு விசயம் சான்தனம் துணிவு
தனம் மதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு
அழகு பெருமை ஆறாம் குலம் நோய்கள்பூண் வயது
பதினாறு பேரும் தருவாய் பராபரமே...

துதிவாணி
வீறு
விசயம்
சான்தனம் (குழந்தை பேறு)
துணிவு
தனம்
மதி
தானியம்
சௌபாக்கியம்
போகம்
அறிவு
அழகு
பெருமை
அறம்
குலம்
நோய்கள்பூண் வயது (நோயற்ற நெடு வாழ்வு)

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012


ஔவையார் - இந்த பெயரை கேட்டவுடனேயே நம் கண்முன் தோன்றுவது பழம்பெரும் நடிகை கொ.பா.சுந்தராம்பாள் (K.B.Sundarambal) அவர்கள்தான்...

ஆனால், ஔவையார் அவர்கள் எழுதிய நூல்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண் புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது...

முதல் ஔவையார் - இவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். இவருக்குதான் தகடூர்-ஐ ஆண்ட அதியமான் நெடுமனஞ்சி தான் பெற்ற சாகாவரம் கொடுக்கும் நெல்லிக்கனியினை கொடுத்தார்.

அதற்க்காக, பின்வரும் பாடலை ஔவையார் அதியமான் நெடுமனஞ்சி பற்றி பாடினார். இந்த பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ள பாடல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

இரண்டாம் ஔவையார் - இவர் ஒன்பது-பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி

இவர் முதல் ஔவையார் இல்லை என்ற முடிவிற்கு வர காரணம்:
நல்வழி நூலில் நாற்பதாவது பாடலில், திருமூலர், தேவாரம், திருவாசகம் ஆகியவை மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆகையினால் அவர் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும், யாப்பருங்கலம் என்னும் நூலில் கொன்றைவேந்தன் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. ஆகையினால் அவை பன்னிரெண்டாம் நூற்றாண்டிர்க்குப்பின் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது ஔவையார் - இவர் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி போன்ற புலவர்கள் வாழ்ந்த பன்னிரெண்டாம்-பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

நானக் குறள்
விநாயகர் அகவல்
கல்வியோழுக்கம்
அருந்தமிழந்தாதி
அகத்துக்கொவை
நன்மணிமாலை

இவர் மூன்றாவது ஔவையார் என்ற முடிவிற்கு வர காரணம்: கம்பருக்கும் இவருக்கும் நடந்த புலமைப் போட்டி. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற வரிகள் அந்த விவாதத்தின்போது அவர் கூறியது.