சனி, 31 மார்ச், 2012


குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

புதன், 28 மார்ச், 2012


குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

உரை:
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

திங்கள், 26 மார்ச், 2012


பழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

சிறிது சிறிதாக நகர்த்தினால் அம்மியும் நகரும் என்பதுதான் இதற்கான பொருள். அம்மி கனமாக பொருள். அதை அவ்வளவு எளிதில் நகர்த்திட முடியாது என்பது அம்மியைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். ஏன் அம்மியை அடிக்க வேண்டும்? மூன்று நான்கு பேராக எளிதில் தூக்கி வைத்து விட்டுப் போகலாமே என்று தோன்றுகிறதுதானே.

ஆனால் இது அம்மியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தூக்கி வைக்க சொன்ன பழமொழி அல்ல.

அப்படியானால் வேறு எதற்காக சொல்லப்பட்டது?

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் பகரும்.

வீட்டின் மூலையில் பெரும்பாலான நேரங்களில் சும்மா கிடக்கும் பொருளான அம்மிக்கல் அல்லது அக்கல்லைப் போன்ற வடிவமுடைய பிற கற்களும், தேர்ந்த சிற்பி ஒருவனால் அடித்து அடித்து சிலையாக்கினால் அச்சிலைக்கு உயிர் வந்து பகரும் அதாவது பேசும் என்பதுதான் இதற்கான பொருள்.

இங்கே பகர்த்தல் என்பது பேசுவதைக் குறிக்கிறது. கண்கள் பேசுகின்றன என்பது போல் சிலை பேசும் என்பதைதான் அம்மியும் பகரும் என்று குறிப்பிடுகிறார்கள்.அழகான சிலை என்பதை விட அற்புதமான சிலை அதனுடைய ஒவ்வொரு பாகமும் எதையோ சொல்கின்றன என்பதைதான் அம்மியும் பகரும் என்றனர்.

இது போல் அறிவில்லாத ஒருவனையும் சொல்லிச் சொல்லி நல்லவனாக்க முடியும் என்பதை பழமொழியின் உட்கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

வெள்ளி, 23 மார்ச், 2012


பழமொழி:

"அடுக்களை குற்றம் சோறு குழைந்தது
அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது".

சோறு குழைந்து போனதற்கு அடுப்பங்கரை செய்த பிழை என்று முதல் வரிக்கு மேலோட்டமாகப் பொருள் புரிந்து கொண்டாலும் அது அடுப்பு செய்த குற்றம் அல்ல. பதம் தெரியாமல் அடுப்பில் அதிகமாய் அதை குழைய வேக விட்டது சமையல் செய்த பெண்ணின் குற்றமாகும். அடுப்பில் சோறு வைத்த ஞாபகமே இன்றி அதை கவனிக்காமல் விட்டதும் அப்பெண் செய்த தவறாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது வரியில் உள்ள அகமுடையான் என்ற சொல் கணவனைக் குறிக்கிறது. அவன் செய்த குற்றம் என்ன? அவன் செய்த பாவத்தின் காரணமாகத்தான் பெண் பிள்ளை பிறந்தது என்று நேரடி பொருளை எடுத்துக்கொண்டால் அது தவறு.

நாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடியெல்லாம் குழந்தைப் பிறப்பதில்லை. அப்படி பாவம் செய்தால் பெண் குழந்தையும், புண்ணியம் செய்தால் ஆண் குழந்தையும் பிறக்குமா என்ன?

இந்த வரிக்கு அது பொருள் அல்ல.
ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் கணவன்தான் காரணம் என்ற உண்மை திருமூலரில் தொடங்கி, நம் ஆதி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய அறிவியல் 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்பது ஆண்களுக்கே உரிய குரோமோசோம்கள் என்று குறிப்பிடுகிறது.

பெண்களுக்கு எப்போதும் எக்ஸ்(X) / எக்ஸ்(X) என்ற குரோமோசோம்கள்தான் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாய்மை அடைய முடியும். அப்படி இல்லாமல் ஆண்களுக்குரிய 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற குரோமோசோம் அபூர்வமாக இருந்தால் அப்பெண்ணுக்கு குழந்தைப் பிறக்காது.

ஆணிடம் உள்ள எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற இரண்டு குரோமோசோமில் கலவியின் போது எது பெண்ணிடம் போய் சேருகிறதோ அதைப் பொறுத்துதான் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு நிகழ்கின்றன.

ஆணிடம் உள்ள ஒய்(Y) குரோமோசோம் பெண்ணிடம் போய் சேர்ந்தால் அப்போது (ஒய்யும்(Y) எக்ஸும்(X) சேர்ந்து) ஆண் குழந்தை உருவாகிறது.
அப்படியில்லாமல் ஆணிடமுள்ள எக்ஸ்(X) போய் சேர்ந்தால் ஏற்கனவே பெண்ணிடம் நிரந்தரமாக உள்ள எக்ஸுடன்(X) சேர்ந்து(இரண்டு எக்ஸ் (X) சேர்ந்தால்) பெண் குழந்தை பிறக்கிறது.

திருமூலர் தன் பாடல் ஒன்றில்

"ஆண் மிகில் ஆண் ஆகும்
பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில்
அலியாகும்
தாள்மிகும் ஆயின்
தரணி முழுவதும் ஆளும்
பாழ் நவம் மிக்கிடின்
பாய்ந்ததும் இல்லையே" என்கிறார்.

இதற்கான பொருள் ஆணுக்குரிய ஒய்(Y) குரோமோசோம் பாய்ந்தால் ஆண் குழந்தையும், பெண்ணுக்குரிய எக்ஸ்(X) குரோமோசோம் சென்றால் பெண் குழந்தையும் பிறக்கும்.

இவை இரண்டும் இன்றி ஆணிடமிருந்து எக்ஸ்(X) ஒய்(X) இரண்டும் சேர்ந்து சென்றால் திருநங்கைகள் பிறக்கிறார்கள்(அலி)என்றும்,
விந்துவில் உயிர் அணு இல்லாவிட்டாலும், பெண்ணிடம் மாதந்தோறும் கருமுட்டையே உருவாகாமல் போனாலும் குழந்தையே பிறக்காது என்பதை "பாழ் நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே..." என்கிறார்.

அறிவியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இப்பழமொழி.
சாப்பாடு குழைந்ததற்கு வேண்டுமானால் பெண் காரணமாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைப் பிறந்ததற்கு பெண் காரணமல்ல, அவளது கணவனே என்பதைதான் இப்பழமொழி நமக்கு எடுத்துச் சொல்கிறது.

ஞாயிறு, 18 மார்ச், 2012


குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

உரை:
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

வியாழன், 15 மார்ச், 2012



உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று. அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன. இனத்திலும், சாதியிலும், மததிலும், நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான். இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ?

வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான்.

தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை. ல, ள மற்றும் ழ இடையிலான ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது.
எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும்.

'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)

'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)

'ழ்' என்னும் எழுத்த்க்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்.

பல்-பள்ளம்-பழம்..... இது ஓர் எளிமையான பயிற்சி! இப்பயிற்சிகளை ஒரு பயிலரங்கில் கற்றுக் கொடுக்கும்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவியொருத்தி (சங்கீதா என்று நினைவு) கேட்டாள்:
"பல் என்று சொல்லும்போது நாக்கு பல்லில் பட வேண்டும் என்கிறீர்கள்! அப்படியானால் 'கல்' என்று சொல்லும்போது நாக்கு கல்லில் படவேண்டுமா?" நம் குழந்தைகளின் புத்திகூர்மையும் நகைச்சுவையும் சமயோஜிதமும் வியக்க வைக்கின்றன. இது போன்ற பல சொற்களையும், தொடர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்க்கவும். உதாரணத்திற்குச் சில:

--- கல், நில், மலை, கலை, கள், வெள்ளை, மக்கள், விழை, வாழ்க்கை, ஆழி
--- வாழைப்பழத்தோல் வழுக்கி ஏழைக்கிழவன் கீழே விழுந்தான்
--- அவன் நல்லவன் அல்லன்
--- கல்லிலிருந்து எடுத்தான்
--- சொல்லொன்று சொல்லேன்
--- தள்ளும் உள்ளம்
--- தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்
--- பள்ளத்தில் உள்ள முள்ளெடு
--- கீழே விழுந்து அழுதான்
--- கொழுகொழுத்த வாழை

மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு "நாநெகிழ் பயிற்சி" என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு "நாபிறழ் பயிற்சி" என்று பெயர்.

உதாரணங்கள்:

--- தொழிலாளி
--- மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
--- பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது

நெற்றிக்குப் பொட்டிட்டு, விழிகளில் மையிட்டு, முகத்தில் நறுமணத் தைலமும் பொடியும் பூசி, இமைகளில், உதட்டில், கன்னங்களில், கூந்தலில், நகங்களில் வன்ணமிட்டு, கழுத்து, காது, மணிக்கட்டில் பொன், வெள்ளி அணிகள் பூட்டி, நகங்களை சீராக்கி, தலைமுடி நறுக்கி, கண்கவர் ஆடைகளையும் , கண்கண்ணாடிகளையும் குளிர்சாதன விற்பனையகங்களில் ஐந்துமணிநேரம் பொறுக்கிக் கழித்து எடுத்துத் தள்ளி, சோர்ந்து தேர்ந்து வாங்கி அணியும் நாம் மிகுந்த அழகுணர்ச்சியும் ரசனையும் கொண்டவர்கள் தான். ஆனால் வாயிலிருந்து வெளிப்படும் மொழியும் அதே போல அழகுடன் இருப்பதன் சுகத்தையும், சுவையையும் உண்ர்ந்தால்தான் நமது அழகுணர்ச்சியும் ரசனையும் முழுமை பெறும்...


படித்ததில் பிடித்தது:

உங்கள் பெற்றோரை...
அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்...
இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை...

ஞாயிறு, 11 மார்ச், 2012


எனது கிறுக்கல்கள்:

சில குழந்தைகள் மனதில்...

தன்னை மடியில் தவழ விடாமல் மடிக்கணினியை மடியில் போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும் தாய்...

தன் முகத்தை பாராமல் முகப்புத்தகத்தை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தந்தை...

தன்னை கண்டு பரிதாபப்படாமல்... செல்லம்மா, துளசி - இவர்களின் நிலையை கண்டு தினமும் பரிதாபப்படும் பாட்டி...

தன்னுடன் நேரம் கழிக்காமல், செய்திகள் பார்ப்பதும் படிப்பதும், தன் நண்பர்களுடன் பூங்காவில் விவாதிப்பதுமாக காலம் கழிக்கும் தாத்தா...

முதியோர் இல்லத்திற்கு ஒரு முன்னோட்டம்...

சனி, 10 மார்ச், 2012


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்


 பழமொழி: சிவ பூசையில் கரடி

பூசை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூசையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூசை செய்யும் போது, கரடி என்னும் வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூசையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூசைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

வெள்ளி, 9 மார்ச், 2012


குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

உரை:
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி...

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும். இதோ அதன் பொருள்:

தாதி - தோழியின் (அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை - (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக...

கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்தில், இதே பாடலை:

நடுவர் - உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

ஆண் - கேக்க சொல்லுங்க....

பெண்:
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஆண் - கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர் - அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

ஆண் - நான் திணர்றேனாவது..

நடுவர் - பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண் - முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர் - சரி சொல்லுங்க..

பெண்:
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.

வியாழன், 8 மார்ச், 2012

மகளிர் தினம்: எனக்கு அகவேழுச்சி தந்த பெண்களில் ஒருவர்


பெண் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக
கல்வி இருந்த காலத்தில் அதனை
எட்டிப்பரித்து சுவைத்து பார்த்தவர் நீ...

இயற்க்கை தந்த பருவம் என்னும் பதவியுயர்விர்க்காக
பள்ளி உனக்கு கல்வியினை மறுத்து வீட்டுச் சிறையினில் தள்ளியபோது
சிறைதனையே பள்ளியாக்கி கல்விக்கனவினை மெய்ப்பித்தவர் நீ...

காளைகள் மட்டுமே சீறிப்பாய்ந்துகொண்டிருந்த
உயர்கல்வி என்னும்  சல்லிக்கட்டில்
ஆழிப்பேரலை போல சீறிப்பாய்ந்து வெற்றிகண்ட காமதேனு நீ...

பல்லி, கரப்பான் போன்ற சிறய உயிரினங்களை கண்டு
எட்டு அடி பின்னால் சென்ற பெண்களுக்கு மத்தியில்
பதினாறு அடி முன்னே சென்று மனித உயிரினை காக்க
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானவர் நீ...

ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கைம்பெண்களுக்கும்
உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் கொடுக்க
சென்னை அடையாரில் தமிழ் மூதாட்டி அவ்வையின் பெயரில்
தொண்டு நிறுவனம் நிறுவி அன்பின் பிறப்பிடமானவள்  நீ...

அரசியல் என்றால் கிலோ என்ன விலை
என்று கேட்ட பெண்கள் பலரிருக்க
ஆண் சிங்கங்களுக்கு மத்தியில் தனியொரு பெண் சிங்கமாய்
சட்டமன்றத்திற்கு சென்ற இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் நீ...

தன்னுடைய பகைவருக்கும் வரக்கூடாது என்று அந்நாளில் நினைக்க வைத்த
புற்றுநோய் என்னும் கொடிய அரக்கனிடமிருந்து மனித சமுதாயத்தை மீட்டிட
சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவி
நோய்வாய்பட்டவருக்கு மறுவாழ்வு அளித்து செவிலித்தாயானவள் நீ...

அக்காலத்தில் பெண்களுக்கு இழைத்த மிகப்பெரிய கொடுமையான
தேவதாசி என்னும் முறையற்ற பழக்கத்தை
இந்தியாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் வேருடன் களையெடுக்க
தந்தை பெரியாருடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் நீ...

இவற்றிர்க்கெல்லாம் முத்தாய்ப்பாக...

குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக
தமிழ்நாட்டு குழந்தைகளின் இரண்டாம் கருவறையான
சென்னை குழதைகள் நல மருத்துவமனை நிறுவி
மறுபிறவி எடுக்க வந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் மறுபிறவி அளித்தவர் நீ...

இவ்வளவு செயற்கரிய செயல்கள் செய்த நீ...
இன்று மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த நீ...
எனக்கு இரண்டாம் கருவறை கொடுத்த நீ...
மருத்துவர்.முத்துலச்சுமி ரெட்டி என்கின்ற நீ...

புதன், 7 மார்ச், 2012



பழமொழி: ஆமை புகுந்த வீடு உருப்படாது


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு. ஆமையின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு இக்கருத்து சரியாகுமா? இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்? எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன? வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும்.



கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

ஆம்பி பூத்த வீடு உருப்படாது.
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான "ஆம்பி பூத்த" என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

விடுகதை

மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்
முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே
ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்....

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்
நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை
நீக்கினால் விரோதமாகும்...
நன்றே அந்த மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்
முடியாமற் போகாது தேடிப் பார்த்தால்...

செவ்வாய், 6 மார்ச், 2012

தலைக்கவசம்...


படித்ததில் பிடித்தது:

குழியினுள் புதைந்தும், மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும், இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்...

திரும்பிய திசையெல்லாம் கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும் கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும் வழிநெடுக...
வானுயர பேனர்களில்!

அலுவலக அவசரத்தில் பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும், சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்...
சாலைப் பாதுகாப்பு...

சாலை விதிகள் நமக்குத் தெரியும், எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது...

அன்று... போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம் பேருக்கு... அலங்காரமாய்...
இன்றோ... சாலைப்பயணமே போருக்குச் சமம்...
நேருக்கு நேர், கொரில்லா யுத்தம்...
விழுப்புண் அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்...

இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்...
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை...

சின்னஞ்சிறு கவிதைகள்...


படித்ததில் பிடித்தது:

வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்... தேனீக்கள்...

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்... வலையில் சிலந்தி...

பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி...

எண்களை குறிக்கும் சொற்கள்...


தமிழில் 1 முதல் 899 வரை உள்ள எண்களை குறிக்கும் அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.

உதாரணம்:

ஒன்று - கடைசி எழுத்து "று" = ற் + உ.
இரண்டு - கடைசி எழுத்து "டு" = ட் + உ.
எண்ணூற்றி தொன்னுற்று ஒன்பது - கடைசி எழுத்து "து" = த் +உ.

வாஸ்து


படித்ததில் பிடித்தது:

பெயரை மாற்றினான்...
அதிர்ஷ்டக்கல் மோதிரம் மாட்டினான்...
வாஸ்துப்படி வாசலை மாற்றினான்...
வாஸ்து மரம் நட்டான்...
மூலையிலே மீன்தொட்டி வைத்தான்...
வாஸ்து மீன் வளர்த்தான்...
இத்தனைக்குப் பிறகும்
முன்னேற்றமின்றி
மீண்டும் சோதிடரைப் பார்த்தான்...
சோதிடர்: "நீங்க சுகப்பிரசவமா?
வாஸ்துப்படி வயிற்றுவழி பொறந்திருக்கணும்..."

படிப்புக்குப் பணம்...


படித்ததில் பிடித்தது:

படிப்புக்குப் பணம் கட்டும்போதெல்லாம்
கடைசி நாள்வரை காத்திருப்பது
நானாக மட்டுமேயிருப்பேன்...
தவறாமல் நடக்கிறது
எங்கம்மாவிற்காக
பள்ளியில் நான் அடிவாங்குவதும்
எனக்காக எங்கம்மா
முதலியாரிடம் திட்டு வாங்குவதும்...!
எங்கம்மாவால் திட்ட முடிவதில்லை,
தையற்கூலி தருவதற்கு
நாள் தவறியவர்களை...

கழைக்கூத்துச் சிறுமி....


படித்ததில் பிடித்தது:

அந்தரத்தில் நடந்தும்
தலைகுப்புறக் கவிழ்ந்தும்
பின்னோக்கி வில்லென வளைந்தும்
பலமுறை பல்டியடித்தும்
சிந்திட உள்ளுக்குள் ஒன்றுமில்லா
வெற்று வயிறென நிரூபித்தபின்
யாசகம் கேட்டு வருகிறாள்
கழைக்கூத்துச் சிறுமி...!

அளவுகோல்


படித்ததில் பிடித்தது:

என்னுடைய அளவுகோல்-ஐ வாங்கி
என்னையே அடித்து உடைத்த ஆசிரியரும் உண்டு...
ஆனால் உடைத்த அளவுகோல்-ஐ ஒருபோதும்
வாங்கித் தந்ததில்லை...!

பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு


பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு!

தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

'பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடு.' - இதுவே அதன் பொருள் என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்த கருத்து சற்றேனும் ஏற்புடையதாக இருக்கிறதா?. பிச்சைக்காரன் கையில் வைத்திருக்கும் பாத்திரம் பெரியதா? சிறியதா? அலுமினியமா? வெள்ளியா? பித்தளையா? திருவோடா? என்றெல்லாம் பார்த்து பிச்சை இடுங்கள் என்று கருத்து சொன்னால் அது நகைப்புக்கு இடமளிப்பதாய் இருப்பதுடன் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது 'ற' கரத்திற்குப் பதிலாக 'ர' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:

' பாத்திறம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)

பழந்தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்


பழந்தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்:

60 தற்பரை - 1 வினாடி.
60 வினாடிகள் - 1 நிமிடம்
24 நிமிடம் - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 மணி
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை (அ) 2 முகூர்த்தம் - 1 யாமம்
60 நாழிகை 1 நாள்.
8 யாமம் 1 நாள்.
7 நாள் 1 கிழமை.
15 நாள் 1 பக்கம்.
2 பக்கம் 1 மாதம்.
2 மாதம் 1 பருவம்.
3 பருவம் 1 செலவு.
2 செலவு 1 ஆண்டு.

( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )

தமிழ் எழுத்துக்களின் பிறப்பிடம்...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கிறது...

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ), அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது. அங்காத்தல் ( வாய் திறத்தல் ), உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல் என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது.

அ,ஆ எனும் முதல் இரு எழுத்தும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது...

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன...

பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்


பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

நையாண்டி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும்.

யதார்த்த பொருள்: தன்னை சாராத பிள்ளையை பேணி காத்து வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளரும்.

இதன் அர்த்தம் சரிதான்!.. ஆனால் புரிதல்???

இங்கு ஊரான் பிள்ளை என்பது அவரவர் மனைவி.
ஏனென்றால், மனைவி என்பவள் இன்னொருவரின் பிள்ளையல்லவா.. அவளை பேணி காத்து வளர்த்தால் அவளின் வயிற்றில் வளரும் பிள்ளை தானாகவே வளரும்...

பழமொழி: களவும் கற்று மற


பழமொழி: களவும் கற்று மற

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன.

'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும்.

'சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள் எண்: 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும்.

சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கவறு மற'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...


"திருவிளையாடல்" திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொட‌ங்கும் வசனத்தையும் பிற‌கு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?

அந்த திரைப்படத்தில் வரும் வசனம்:

சிவன்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன்:
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

பொருள்: நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.

இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம்...

தமிழில் பேசுவோம்...


"அம்மா" என்னும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!

அண்ணா பல்கலைகழகம் சார்பில் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில், தமிழக திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன், "தமிழுக்கு தலைவணக்கம்" எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அப்போது அவர், 'நம் வீட்டில் கூட தற்பொழுது தமிழில் பேசுவதை மறந்துவிட்டோம். குழந்தைகள் பெற்றோர்களை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால், தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்று பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில், உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' மெய் எழுத்தையும், 10 மாதம் கழித்து உடல் உயிராக உலவவிடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.

அதே போன்றுதான் 'அப்பா' எனும் சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் 'அம்மா' எனும் சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையனவர் என்பதால் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட மொழி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பழமொழி: ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்


பழமொழி: ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

தற்போதைய பொருள்: தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப்பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.

தவறு: மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக்கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச்சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப்பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப்பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

இப்பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்: புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப்பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.

மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.

'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.

இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல

சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.

பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்


பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.

தற்போதைய பொருள்:
அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது.

பழமொழி: தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான்


பழமொழி: தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான்.

நாம் போகும்போது எதுவும் கொண்டு போகப்போவதில்லை எனவே! தானம் தர்மம் செய்து நல்ல பெயரையாவது எடுத்துச்செல்வோம் என்ற பொருள்படி உரைத்த பழமொழி.

ஆனால் இன்று அதை மாற்றி...
"தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம்" என்கின்றனர்.

மேலும் தானம் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு இந்த பழமொழியை மேற்கோள் காட்டி பழமொழியின் பெருமையை குலைக்கின்றனர். இனிமேலாவது நாம் இந்த பழமொழியின் உண்மை கருத்தை அறிந்து அதை பின்பற்றுவோம்....