சனி, 26 மே, 2012


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

இப்பாடலை எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகின்றதா?
ஆம்... திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி பரிசில் பெற சிவபெருமான் தருமிக்கு கொடுத்தனுப்பிய பாடல் இதுதான்...

இறையனார் அவர்கள் எழுதிய இப்பாடல் குறுந்தொகை என்னும் நூளில் இடம்பெற்றுள்ளது...

விளக்கம்:

பூக்களைத் தேர்ந்து(ஆராய்ந்து) தேன் உண்ணும் அழகிய சிறகுகளை கொண்ட வண்டே, நீ சொல்வாயாக... நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக... மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

செவ்வாய், 22 மே, 2012



ஓடும் நீளம் தனை ஒரே எட்டு
கூறு தாக்கி கூரிலே ஒன்றை
தள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

போதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...

விளக்கம்:

அடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.

மேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).

அடிப்பகுதி (Base) - 8
குன்று (Height) - 6

அடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7

குன்றின் அரை பகுதி --> 6/2 = 3

அவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10

பிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):
கர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...

கர்ணத்தின் வர்க்கம் = (8 * 8) + (6 * 6) = 64 + 36 = 100
கர்ணத்தின் வர்க்கமூலம் = 10

பிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை...

ஞாயிறு, 20 மே, 2012


ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.

ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி. நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.

இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா

என்று பதிலளித்தார்.

இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".

(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ

எனவே இப்போது எட்டேகால் = அவ

இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?

எமனேறும் பரியே - எருமைக்கடா

மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே

கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.

புதன், 16 மே, 2012


"கம்பர்" மற்றும் "ஔவையார்" பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி...

தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று ஔவையார் தனது பாடல் மூலம் எடுத்துரைத்தார்...

கம்பரின் பெருமையை காப்பாற்ற, அரசன், பிறப்பிலேயே கம்பர் ஒரு கவிஞர் என்று கூற, அதற்கு ஔவையார்,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

வரைந்து பழகினால்தான் சிறந்த ஓவியம் வரையமுடியும், பேசி பழகினால்தான் தமிழில் சிறந்த பேச்சாளராக திகழ முடியும், படித்து பழகினால்தான் சிறந்த அறிவு உள்ளவராக விளங்க முடியும், ஒழுக்கத்துடன் நடந்தால்தான் பெருந்தன்மை உள்ளவராக வாழ முடியும். நட்பு மனப்பான்மை, கருணை உள்ளம், நன்மை செய்யும் மனப்பாங்கு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் பயிற்சி செய்தாலன்றி செவ்வன செய்யயியலாது. கம்பரின் கவித்திறமையும் கவி எழுதி பழகியாதால் வந்ததேயன்றி பிறப்பிலேயே வந்ததன்று என்று கூறினார் ஔவையார்...

ஔவையார் கூறியது உண்மை எனத்தெரிந்தும் கம்பரின் பெருமையை நிலைநாட்ட கவித்திரனிலும் சொல்வன்மையிலும் கம்பருக்கு நிகராக யாரும் இல்லை எனக்கூறினார்.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி .

பேசக்கற்றுக்கொண்ட கிளி தொடர்ந்து பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும். ஆனால் பூனையை கண்டவுடன் பேசுவதை மறந்து அலற ஆரம்பித்துவிடும். அதுபோல், சிறந்த கல்வி கற்றோ அல்லது சிறந்த செயல் செய்தபின்போ நம்மை சுற்றியுள்ளவர் மத்தியில் அதை பற்றி பேசலாம், ஆனால், சான்றோர் முன் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும், இல்லையேல், பூனையை கண்ட கிளியின் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவர் என்று பாடினார்.

செவ்வாய், 15 மே, 2012


கம்ப இராமாயணம் எழுதிய பிறகு கம்பர் மிகச்சிறந்த புலவராக கருதப்பட்டு போற்றப்பட்டார். அரசரும் கம்பரின் கவி திறமையை மட்டுமே பாராட்டிக்கொண்டிருந்ததால் மற்ற புலவர்களை அரசன் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக கம்பர் மற்ற புலவர்களை மரியாதை குறைவாக நடத்த ஆரம்பித்தார். அவருடைய உடையிலும் ஆடம்பரம் கூடியிருந்தது.

இதை கண்ட ஔவையார், பின்வருமாறு கவி புனைந்தார்.

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வஞ்சக எண்ணம் கொண்ட இரண்டு பேர் புகழ்ந்து பேசிடவும், விரல்கள் முழுவதும் மோதிரங்கள் மற்றும் பட்டாடை உடுத்தி இருக்கும் கவிஞர் எழுதிய பாடல் நஞ்சினை போல தீயதாக அல்லது வேம்பினை போல கசந்தாலும் நன்றாக இருப்பாதாகவே கூறுவர்.

ஒருவர் தான் எழுதிய கவி மூலமாக பெயரும் புகழும் அடைந்திருந்தாலும் அவர் தன்னடக்கத்துடன் இருந்திடவேண்டும் என்று ஔவையார் கூறுகிறார்...

மேற்கூறிய ஒளவையாரின் பாடலினை கேள்விப்பட்ட அரசன், கம்பரின் நடவடிக்கையின் மேல் ஔவையார் அவர்கள் கொண்டிருந்த கோபத்தினை கண்டு, கம்பருக்கு ஆதரவாக, வேறு எந்த புலவரும் செய்திடாத ஒரு செயலினை (கம்ப இராமாயணம் எழுதியது) கம்பர் செய்திருப்பதாக புகழ்ந்தார்.

இதை கேட்ட ஔவையார், பின்வருமாறு பாடினார்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

தூக்கணாங்குருவி கட்டுகின்ற எளிதற்ற மற்றும் நுண்மையான கூடு, கரையான் கட்டுகின்ற உறுதியான மண்மேடு, தேனீக்கள் கட்டுகின்ற தேன் கூடு, சிலந்தி கட்டுகின்ற வலை வேறு எவராலும் அவ்வளவு எளிதாக செயலன்று. அதைப்போல் தாம் செய்த செயல்களை வைத்து தற்புகழ்ச்சி பேசுவதில் பயனில்லை.

அதுமட்டுமல்லாமல், தம்மால் சுலபமாக செய்யக்கூடிய மற்றவருக்கு கடினமான ஒரு செயலினை செய்துவிட்டு மற்றவரைவிட உயர்வானவர் என்று கூறமுடியாது. தூக்கணாங்குருவி அதன் கூடிநி சுலபமாக கட்டிவிடும், ஆனால், கரையான் கட்டுகின்ற உறுதிமிக்க மண்மேடினை கட்ட இயலாது. ஆகையினால் ஒருவர் தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று கூறினார்...

இதை கேட்டு, கம்பரின் மானத்தை காப்பாற்ற அரசன் கூறியது என்ன? அதற்கு ஔவையார் கூறியது என்ன? இவற்றை அடுத்த பதிவினில் காண்போம்...

சனி, 12 மே, 2012


மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...

செவ்வாய், 8 மே, 2012


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்...

திங்கள், 7 மே, 2012


குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

ஞாயிறு, 6 மே, 2012


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...

விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்...

வெள்ளி, 4 மே, 2012


"மூதுரை" என்னும் நூளில் "ஔவையார்" எழுதிய பாடல் இது...

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளய்
நட்டாலும் நண்பல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

சூழ்நிலையின் தாக்கம் இருந்தாலும் சில பொருட்களின் தன்மை மாறுவதில்லை... நன்கு கொதிக்க வைத்த பாலின் சுவை  மாறாமல் இருப்பது போல... நண்பர்கள் அல்லாத இருவர் அருகருகே இருந்தாலும் அவர்கள் நண்பர்களாக மாறுவதில்லை...

தீயினால் சுடப்பட்டாலும் உட்புறம் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும் சங்கினை போல, எத்துனை துன்பம் வந்தாலும் மேன்மக்கள் பெருந்தன்மை உடையவர்களாகவே திகழுவர்...

புதன், 2 மே, 2012


குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

உரை:
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.