புதன், 24 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 2 – பாரதத்தில் சோறளித்த சிறப்பு

பாடியவர் – முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப்பெற்றவர் – சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

பாடல்:
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம பெரும் பூதத்து இயற்கை போல –
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய் !
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடற் குளிக்கும்,

யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந !
வான வரம்பனை ! நீயோ, பெரும !
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,

பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் !
பா அல் புளிப்பினும், பகல் இருளினும்,
நா அல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை – அடுக்கத்து,

சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே !

எளிய உரை:
மண் நிறைந்த நிலமும்
நிலம் ஏந்திய வானமும்
வானைத் தழுவும் காற்றும்
காற்று வளர்க்கும் நெருப்பும்
நெருப்பைப் பகைக்கும் நீரும் என்றபடி
ஐம்புலன்களின் இயற்கை போல
பகைவரிடம் பொறுமை, விரிவான ஆலோசனை,
வலிமை, திறமை, தருமமும் உள்ளவனே,
உன் கடலில் பிறந்த சூரியன்
வெண்தலை அலைகள் கொண்ட
மேற்குக் கடலில் குளிக்கும்
நல்ல நாட்டின் அரசனே,
வானம் உன் வரம்பு.
பாண்டவர்கள்
நிலத்தை பற்றிக்கொண்ட
நூறு பேருடன் போராடிய
பாரதப் போரில் சோறுபோட்டாய்.
பால் புளிக்கலாம்,
பகல் இருளாகலாம்,
நாலு வேதங்கள் திசை மாறலாம்,
உன்னைச் சேர்ந்தவர் மாற மாட்டார்கள்.
அந்தணர் அந்திவேளைக் கடமைகளில் எழுப்பும்
தீயின் வெளிச்சத்தில்,
சிறிய தலை, பெரிய கண் பெண்மான் உறங்கும்,
மலைச் சரிவுள்ள
பொன் உச்சி இமயமும் பொதிகை மலையும் போல
நீண்டநாள் வாழ்வாய்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 1 – உமையை இடப்பக்கம் கொண்ட ஒருவன்

பாடியவர் – பெருந்தேவனார்
பாடப்பெற்றவர் – சிவபெருமான்

பாடல்:
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை :
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப :
கரை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே –
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ்சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.

எளிய உரை:
தலையிலும் அழகிய மார்பிலும் கொன்றைப் பூ மாலை,
வாகனம் எருது, கொடியும் எருது,
கழுத்தை அழகு செய்யும் நச்சுக் கறை,
அதை அந்தணர்கள் புகழ்வார்,
சில சமயம் பாதிப் பெண்ணாகவும் தோன்றி மறையும் உருவம்,
நெற்றியில் நிலாத் துண்டம்,
அதைப் போற்ற பதினெட்டு கந்தர்வர்கள்,
எல்லா உயிர்களுக்கும் காவல்,
நீர் வற்றாத கமண்டலம்,
கடுந்தவத்தின் அடையாளமாக தாழ்ந்த சடை.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012


புறநானூறு... தொடர்ச்சி...

புறநானூறின் காலத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளன. புறநானூறு உள்ளிட்ட பல சங்கப்பாடல்களில் யவனர்களைப் பற்றியும் அவர்களுடன் வாணிபம் பற்றியும் வரிகள் உள்ளன. பெரிப்லூசு, டாலமி, ப்ளினி போன்றவர்களின் பூகோளப் பிரயாண நூல்களில் தென்னிந்தியத் துறைமுகங்களில் குறிப்பாக மிளகு பண்டமாற்று நடந்ததைப்பற்றியும் செய்திகள் உள்ளன. புறநானூறு பாடல் 343இல் முசிறி துறைமுகத்தில் வீடுதோறும் மிளகு குவித்து வைத்திருப்பதையும் அவைகளை பண்டமாற்ற தங்கத்தைக் கொண்டுவரும் சிறு படகுகளையும் பற்றி சொல்கிறது.

பாடல் 174 சோழ அரசனை மீட்ட ஒரு சரித்திர சம்பவத்தை கூறுகிறது. சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டியதையும் இலங்கை மன்னன் கயவாகு வந்து வழிபட்டதையும் சொல்கிறது.கயவாகு கி.பி. 171இலிருந்து 192வரை ஆண்டதை கெய்கர் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவன் காலத்தை பதிற்றுப்பத்திலிருந்து கி.பி. 170இலிருந்து 226வரை என அறியமுடிகிறது. செங்குட்டுவன், உதியன் செரலாதனின் பேரன். எந்த நூற்றாண்டாக இருந்தாலும் புறநானூற்றின் பாடல்கள் உலக இலக்கியத் தரத்துக்கு உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை.

புறநானூற்றின் பாடல்களில் உவமைகள் அதிகம். “என்ன கேட்கிறாய்” என்று நேரடியாக சொல்லாமல் “என் சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு என்ன கேட்கிறாய்” என்று சொல்வார்கள். வேல் என்று நேரடியாக சொல்லமாட்டார்கள், “பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்” என்பார்கள். பூமியில் சிறிந்த பாதுகாப்பும் புதிதான புலால் நாற்றமும் உடைய நீண்ட வேல் என்பார்கள். மனைவி என்று நேரடியாக இருக்காது. “நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நூதல் மெல்லியல் குறுமகள்” என்று சொல்லுவார்கள். நாணம் மட்டுமே நகையாக அணிந்த மனைவியை நோக்கித் திரும்புகிறேன் என்பதை அவள் நெற்றி கண் போன்றவைகளை ஆகுபெயர்களாகச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் வருநித்துவிட்டுத்தான் விடயத்துக்கே வருவார்கள். அதில் அவளது ஏழ்மையும் அழகும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன.

அடுத்த பதிவிலிருந்து புறநானூறு பாடல்கள் தொடங்கும்...

புறநானூறு:

புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல். தொகை என்றால் தொகுப்பு. இப்போது கவிதை தொகுப்புகள் வருவதில்லையா, அது போல் பழன்காலத்துத் தொகுப்புகள் பல உள்ளன. அவைகளில் எட்டு சங்க காலத்தை சார்ந்தவை. எட்டுத்தொகை என்பார்கள். அவற்றின் பெயர்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல். இவைகளுடன் பத்து நீண்ட பாடல்களும் சங்க காலத்தைச் சேரும். அவை பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பட்டினப் பாலை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, முல்லைப் பாட்டு, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை. இவை இரண்டிலும் சேர்ந்து மொத்தம் 2381 தனிப்பாடல்கள் உள்ளன. மூன்று வரியிலிருந்து 782 வரை நீளமுள்ள பாடல்கள். உலக இலக்கியத்தில் எதிலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை.

இன்றைய தொகுப்புகள் பெரும்பாலும் ஒரே கவிஞருடையதாக இருக்கும். புறநானூறு அப்படியில்லை. பல புலவர்களின் நானூறு பாடல்களின் தொகுப்பு. புறம் என்னும் காதல் அல்லாத, வெளி உலகம் சார்ந்த வீரம், போர், கொடை, நற்குணங்கள், பரிசு கேட்டல், பெறுதல் போன்ற பொருள்களில் தொகுக்கப்பட்ட நானூறு பாடல்கள். சங்க இலக்கியங்களை அகம, புறம் என்று இரு பெரிய பிரிவின்கீழ் வகைப்படுத்துகிறார்கள்.

இந்த நானூறு பாடல்களைப் பற்றிய புள்ளி விவரங்கள். இந்த நானூறு பாடல்களில் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. நாற்பத்து நாலு பாடல்களில் ஒரு சில சீர்கள் அல்லது வரிகள் இல்லாமல் குறைபட்டுக் கிடைத்துள்ளன. இந்த நானூறு பாடல்களை நூற்று நாற்பத்தேழு புலவர்க்குக் குறையாதவர்கள் பாடியுள்ளனர். சரியாக இத்தனை பேர் என்று சொல்ல முடியவில்லை. 159 வரை கணக்கு சொல்கிறார்கள். மூலத்தில் உள்ள பாட பேதங்களால் சில புலவர்களின் பெயர்கள் வேறுபடுகின்றன. உதாரணம் மாங்குடி கிழாரும் மாங்குடி மருதனாரும் ஒன்றா வேறா போன்ற சந்தேகங்கள் உள்ளன. சிருவெனண்தேரையர் என்பவரும் ஐயாதிச் சிறுவெண் தேரையார் என்பவரும் ஒருவரா என்பது தெரியவில்லை. பதினான்கு பாடல்களை எழுதியவர் பெயர் தெரியவில்லை.

இப்புலவர்களில் பதினான்கு பேர் அரசர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஆதரவில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம் (நற்றிணை நூல் அப்படித்தான் மாறன்வழுதி மன்னனால் தொகுக்கப்பட்டது). புறநானூற்றுப் புலவர்களில், பதினைந்து பேர் பெண்கள். புறநானூற்றுப் புலவர்களில் பலர் மற்ற சங்க நூல்களிலும் பாடியுள்ளனர். புறநானூறில் மட்டும் பாடிய புலவர்கள் அறுபத்தாறு பேர்.

தொடரும்...