செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கணக்கதிகாரம் -  கலப்பின உலோகம் செய்யும் முறை

பண்டைகாலங்களில் அரசர்களின் பல்லக்கில் இருந்து போர்வாள் வரை அனைத்தும் உருவாக்க அல்லது வடிவமைக்க பட்டறைகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே பட்டறைகள் உருவாயின. பின்னர், கொல்லன் பட்டறை , தச்சன் பட்டறை என்று பல துறைகள் உருவாயின.

உலோகங்களை கொண்டு பித்தளை, வெண்கலம் போன்ற கலப்புரு பொருட்களை தமிழர்களும் உருவாக்கிருக்கிறார்கள். தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில், வெண்கலம் மற்றும் பித்தளை பிறப்பிக்கும் விவரம் பற்றிய ஒரு செய்யுள் காணப்படுகிறது.

"எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்"

ஒரு எடை என்பது ஒரு பலம், அதாவது 40.8 கிராம்

ஈயம் , துத்தம் - உலோகங்கள் ; பலம் - பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).

விளக்கம்:

வெண்கலம் பித்தளை பிறப்பிக்கும் விவரம் எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம். ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம் என்று .

இக்குறிப்பில் இருந்து, 326.4 கிராம் செம்பும், 81.6 கிராம் ஈயமும் ஒரு உலையில் போட்டு நன்கு கலவை செய்து உருக்கி வருவது வெண்கலம் என்றும், 306 கிராம் செம்பும், 122.4 கிராம் துத்தமும் உலையில் போட்டு உருக்கி வருவது பித்தளை என்றும் தெரிகிறது . ஆனால் கிடைக்கும் வெண்கலமும், பித்தளையும் எவ்வளவு எடை இருக்கும் என்ற குறிப்பு காணப்பட வில்லை. ஆகையால் இதன் எடைகளை கூட்டி , ஏறக்குறைய 400 கிராம் வெண்கலமும், 425 கிராம் பித்தளையும் கிடைக்கும் என்று கூறலாம்.

1 கருத்து: