ஞாயிறு, 9 டிசம்பர், 2012


புறநானூறு பாடல் 5 – நாட்டு மக்களை அன்புடன் காக்க !
பாடியவர் – நரிவெரூஉத் தலையார்
பாடப்பெற்றவர் – சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.

பாடல்:
எருமை அன்ன கருங் கல் இடைதோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை ! நீயோ, பெரும !
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே.

எளிய உரை:
எருமைகள் போல கருங்கற்கள்
இடையே பசுக்கூட்டமும், யானைகளும்
உலவும் காட்டிற்குச் சொந்தமானவனே !
நீ பெரியவன், உனக்கு ஒன்று சொல்வேன்
(தப்பாக எடுத்துக்கொள்ளாதே !)
அருளும் அன்பும் இல்லாதவர்,
நரகத்துக்குச் செல்வர்,
அவர்களோடு சேராது, குழந்தையைக்
காப்பாற்றும் தாயைப் போல நாட்டைக் காப்பாற்று !
அரச பதவி கிடைப்பது
அத்தனை எளிதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக