ஞாயிறு, 25 நவம்பர், 2012


புறநானூறு பாடல் 4 – தாய் இல்லாக் குழந்தை போல
பாடியவர் – பரணர்
பாடப்பெற்றவர் – சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னி
திணை: வஞ்சித் திணை
துறை: கொற்றவள்ளை

பாடல்:
வாள், வலம் தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன;
தாள், களம் கொள, கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,

நிலைக்கு ஓராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,

நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந்து எழுதரும்

செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ –
அனையை ஆகன்மாறே,
தாய் இல் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

எளிய உரை:
கத்தியில் படிந்த ரத்தக்கறை
செவ்வானம் போன்றது.
உன் காலணியின் சித்திர வேலைப்பாடுகள்
போரில் தேய்ந்து
எருதின் கொம்பு போல் ஆயின.
கேடையங்கள் அம்பினால் துளைக்கப்பட்ட
குறி தவறாத இலக்கை காட்டின.
இடம் வலம் திருப்பிக் காட்டிய
கடிவாளம் உராய்ந்து
குதிரையின் ரத்தம் சிவந்த வாய் எருதைக் கொன்ற
புலி வாய் போல ஆயிற்று.
கதவுகளின் மீது மோதி தந்தங்கள் உடைந்த
யானைகள் உயிர் உண்ணும் எமன் போல,
குதிரை பூட்டிய தேரில் நீ சிவப்புச் சட்டை
அணிந்து அழகாக வரும்போது
கடலிலிருந்து எழும் சூரியனைப் போலத் தோன்றும் !
உன்னைப் பகைத்தவர்கள் நாடு
தாயில்லாக் குழந்தை பசியால் அழுவதைப் போல்
ஓயாது கூவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக