செவ்வாய், 15 மே, 2012


கம்ப இராமாயணம் எழுதிய பிறகு கம்பர் மிகச்சிறந்த புலவராக கருதப்பட்டு போற்றப்பட்டார். அரசரும் கம்பரின் கவி திறமையை மட்டுமே பாராட்டிக்கொண்டிருந்ததால் மற்ற புலவர்களை அரசன் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக கம்பர் மற்ற புலவர்களை மரியாதை குறைவாக நடத்த ஆரம்பித்தார். அவருடைய உடையிலும் ஆடம்பரம் கூடியிருந்தது.

இதை கண்ட ஔவையார், பின்வருமாறு கவி புனைந்தார்.

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வஞ்சக எண்ணம் கொண்ட இரண்டு பேர் புகழ்ந்து பேசிடவும், விரல்கள் முழுவதும் மோதிரங்கள் மற்றும் பட்டாடை உடுத்தி இருக்கும் கவிஞர் எழுதிய பாடல் நஞ்சினை போல தீயதாக அல்லது வேம்பினை போல கசந்தாலும் நன்றாக இருப்பாதாகவே கூறுவர்.

ஒருவர் தான் எழுதிய கவி மூலமாக பெயரும் புகழும் அடைந்திருந்தாலும் அவர் தன்னடக்கத்துடன் இருந்திடவேண்டும் என்று ஔவையார் கூறுகிறார்...

மேற்கூறிய ஒளவையாரின் பாடலினை கேள்விப்பட்ட அரசன், கம்பரின் நடவடிக்கையின் மேல் ஔவையார் அவர்கள் கொண்டிருந்த கோபத்தினை கண்டு, கம்பருக்கு ஆதரவாக, வேறு எந்த புலவரும் செய்திடாத ஒரு செயலினை (கம்ப இராமாயணம் எழுதியது) கம்பர் செய்திருப்பதாக புகழ்ந்தார்.

இதை கேட்ட ஔவையார், பின்வருமாறு பாடினார்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

தூக்கணாங்குருவி கட்டுகின்ற எளிதற்ற மற்றும் நுண்மையான கூடு, கரையான் கட்டுகின்ற உறுதியான மண்மேடு, தேனீக்கள் கட்டுகின்ற தேன் கூடு, சிலந்தி கட்டுகின்ற வலை வேறு எவராலும் அவ்வளவு எளிதாக செயலன்று. அதைப்போல் தாம் செய்த செயல்களை வைத்து தற்புகழ்ச்சி பேசுவதில் பயனில்லை.

அதுமட்டுமல்லாமல், தம்மால் சுலபமாக செய்யக்கூடிய மற்றவருக்கு கடினமான ஒரு செயலினை செய்துவிட்டு மற்றவரைவிட உயர்வானவர் என்று கூறமுடியாது. தூக்கணாங்குருவி அதன் கூடிநி சுலபமாக கட்டிவிடும், ஆனால், கரையான் கட்டுகின்ற உறுதிமிக்க மண்மேடினை கட்ட இயலாது. ஆகையினால் ஒருவர் தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று கூறினார்...

இதை கேட்டு, கம்பரின் மானத்தை காப்பாற்ற அரசன் கூறியது என்ன? அதற்கு ஔவையார் கூறியது என்ன? இவற்றை அடுத்த பதிவினில் காண்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக