புதன், 16 மே, 2012


"கம்பர்" மற்றும் "ஔவையார்" பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி...

தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று ஔவையார் தனது பாடல் மூலம் எடுத்துரைத்தார்...

கம்பரின் பெருமையை காப்பாற்ற, அரசன், பிறப்பிலேயே கம்பர் ஒரு கவிஞர் என்று கூற, அதற்கு ஔவையார்,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

வரைந்து பழகினால்தான் சிறந்த ஓவியம் வரையமுடியும், பேசி பழகினால்தான் தமிழில் சிறந்த பேச்சாளராக திகழ முடியும், படித்து பழகினால்தான் சிறந்த அறிவு உள்ளவராக விளங்க முடியும், ஒழுக்கத்துடன் நடந்தால்தான் பெருந்தன்மை உள்ளவராக வாழ முடியும். நட்பு மனப்பான்மை, கருணை உள்ளம், நன்மை செய்யும் மனப்பாங்கு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் பயிற்சி செய்தாலன்றி செவ்வன செய்யயியலாது. கம்பரின் கவித்திறமையும் கவி எழுதி பழகியாதால் வந்ததேயன்றி பிறப்பிலேயே வந்ததன்று என்று கூறினார் ஔவையார்...

ஔவையார் கூறியது உண்மை எனத்தெரிந்தும் கம்பரின் பெருமையை நிலைநாட்ட கவித்திரனிலும் சொல்வன்மையிலும் கம்பருக்கு நிகராக யாரும் இல்லை எனக்கூறினார்.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி .

பேசக்கற்றுக்கொண்ட கிளி தொடர்ந்து பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும். ஆனால் பூனையை கண்டவுடன் பேசுவதை மறந்து அலற ஆரம்பித்துவிடும். அதுபோல், சிறந்த கல்வி கற்றோ அல்லது சிறந்த செயல் செய்தபின்போ நம்மை சுற்றியுள்ளவர் மத்தியில் அதை பற்றி பேசலாம், ஆனால், சான்றோர் முன் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும், இல்லையேல், பூனையை கண்ட கிளியின் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவர் என்று பாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக