ஞாயிறு, 20 மே, 2012


ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.

ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி. நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.

இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா

என்று பதிலளித்தார்.

இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".

(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ

எனவே இப்போது எட்டேகால் = அவ

இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?

எமனேறும் பரியே - எருமைக்கடா

மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே

கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.

3 கருத்துகள்:

  1. தங்கள் சிறப்பான பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    இணைப்பு:
    உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?
    http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

    பதிலளிநீக்கு