வியாழன், 19 ஏப்ரல், 2012

நாராய்! நாராய்... செங்கால் நாராய்...


காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.

உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.


அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல். அந்தப் பாடல் –

"நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி..." -என்று போகிறது.

இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளிவாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.

(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக