வெள்ளி, 23 மார்ச், 2012


பழமொழி:

"அடுக்களை குற்றம் சோறு குழைந்தது
அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது".

சோறு குழைந்து போனதற்கு அடுப்பங்கரை செய்த பிழை என்று முதல் வரிக்கு மேலோட்டமாகப் பொருள் புரிந்து கொண்டாலும் அது அடுப்பு செய்த குற்றம் அல்ல. பதம் தெரியாமல் அடுப்பில் அதிகமாய் அதை குழைய வேக விட்டது சமையல் செய்த பெண்ணின் குற்றமாகும். அடுப்பில் சோறு வைத்த ஞாபகமே இன்றி அதை கவனிக்காமல் விட்டதும் அப்பெண் செய்த தவறாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது வரியில் உள்ள அகமுடையான் என்ற சொல் கணவனைக் குறிக்கிறது. அவன் செய்த குற்றம் என்ன? அவன் செய்த பாவத்தின் காரணமாகத்தான் பெண் பிள்ளை பிறந்தது என்று நேரடி பொருளை எடுத்துக்கொண்டால் அது தவறு.

நாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடியெல்லாம் குழந்தைப் பிறப்பதில்லை. அப்படி பாவம் செய்தால் பெண் குழந்தையும், புண்ணியம் செய்தால் ஆண் குழந்தையும் பிறக்குமா என்ன?

இந்த வரிக்கு அது பொருள் அல்ல.
ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் கணவன்தான் காரணம் என்ற உண்மை திருமூலரில் தொடங்கி, நம் ஆதி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய அறிவியல் 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்பது ஆண்களுக்கே உரிய குரோமோசோம்கள் என்று குறிப்பிடுகிறது.

பெண்களுக்கு எப்போதும் எக்ஸ்(X) / எக்ஸ்(X) என்ற குரோமோசோம்கள்தான் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாய்மை அடைய முடியும். அப்படி இல்லாமல் ஆண்களுக்குரிய 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற குரோமோசோம் அபூர்வமாக இருந்தால் அப்பெண்ணுக்கு குழந்தைப் பிறக்காது.

ஆணிடம் உள்ள எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற இரண்டு குரோமோசோமில் கலவியின் போது எது பெண்ணிடம் போய் சேருகிறதோ அதைப் பொறுத்துதான் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு நிகழ்கின்றன.

ஆணிடம் உள்ள ஒய்(Y) குரோமோசோம் பெண்ணிடம் போய் சேர்ந்தால் அப்போது (ஒய்யும்(Y) எக்ஸும்(X) சேர்ந்து) ஆண் குழந்தை உருவாகிறது.
அப்படியில்லாமல் ஆணிடமுள்ள எக்ஸ்(X) போய் சேர்ந்தால் ஏற்கனவே பெண்ணிடம் நிரந்தரமாக உள்ள எக்ஸுடன்(X) சேர்ந்து(இரண்டு எக்ஸ் (X) சேர்ந்தால்) பெண் குழந்தை பிறக்கிறது.

திருமூலர் தன் பாடல் ஒன்றில்

"ஆண் மிகில் ஆண் ஆகும்
பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில்
அலியாகும்
தாள்மிகும் ஆயின்
தரணி முழுவதும் ஆளும்
பாழ் நவம் மிக்கிடின்
பாய்ந்ததும் இல்லையே" என்கிறார்.

இதற்கான பொருள் ஆணுக்குரிய ஒய்(Y) குரோமோசோம் பாய்ந்தால் ஆண் குழந்தையும், பெண்ணுக்குரிய எக்ஸ்(X) குரோமோசோம் சென்றால் பெண் குழந்தையும் பிறக்கும்.

இவை இரண்டும் இன்றி ஆணிடமிருந்து எக்ஸ்(X) ஒய்(X) இரண்டும் சேர்ந்து சென்றால் திருநங்கைகள் பிறக்கிறார்கள்(அலி)என்றும்,
விந்துவில் உயிர் அணு இல்லாவிட்டாலும், பெண்ணிடம் மாதந்தோறும் கருமுட்டையே உருவாகாமல் போனாலும் குழந்தையே பிறக்காது என்பதை "பாழ் நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே..." என்கிறார்.

அறிவியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இப்பழமொழி.
சாப்பாடு குழைந்ததற்கு வேண்டுமானால் பெண் காரணமாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைப் பிறந்ததற்கு பெண் காரணமல்ல, அவளது கணவனே என்பதைதான் இப்பழமொழி நமக்கு எடுத்துச் சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக