செவ்வாய், 6 மார்ச், 2012

பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு


பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு!

தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

'பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடு.' - இதுவே அதன் பொருள் என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்த கருத்து சற்றேனும் ஏற்புடையதாக இருக்கிறதா?. பிச்சைக்காரன் கையில் வைத்திருக்கும் பாத்திரம் பெரியதா? சிறியதா? அலுமினியமா? வெள்ளியா? பித்தளையா? திருவோடா? என்றெல்லாம் பார்த்து பிச்சை இடுங்கள் என்று கருத்து சொன்னால் அது நகைப்புக்கு இடமளிப்பதாய் இருப்பதுடன் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது 'ற' கரத்திற்குப் பதிலாக 'ர' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:

' பாத்திறம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)

2 கருத்துகள்: