செவ்வாய், 6 மார்ச், 2012

பழமொழி: களவும் கற்று மற


பழமொழி: களவும் கற்று மற

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன.

'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும்.

'சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள் எண்: 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும்.

சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கவறு மற'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக